யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம் !!

22.02.2021 08:01:06

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக் கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும்.

இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம், பல்கலைக் கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்தமாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய விருதுகளுக்காககிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு சிறந்த மாணவனுக்கான பல்கலைக்கழக மட்ட விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மெய்யியல் துறை மாணவன் ஒருவரிடம் இருந்து துணைவேந்தருக்குக் கிடைத்த மேன்முறையீட்டின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் விசேட மூதவைக் கூட்டம் கூட்டப்பட்டு மெய்யியல் துறை மாணவன் விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார்.

எனினும், மெய்யியல் துறை மாணவனுக்கு எதிராக மாணவர் தரப்பில் இருந்து மேன்முறையீடுகளும், ஆதாரங்களும், புதிய சாட்சியங்களும் கிடைத்த வண்ணம் இருப்பதனால், விருதுக்குரியவரைத்தெரிவு செய்வதற்குக் கால அவகாசம் போதாமையனால் விருது வழங்கல் இடைநிறுத்தப்படுவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகள் இடம்பெற்று பிறிதொரு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.