முதல்வர் வேட்பாளர் யார்..! முடிவை அறிவித்தது தமிழரசுக் கட்சி

05.03.2023 16:47:34

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ்.மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று (05.03.2023) இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறிலின் பெயரை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறில்கான ஆதரவை திரட்டிய பின்னர் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டம் இன்று (05.03.2023) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் மேயராக இருந்த இ.ஆர்னோல்ட்டின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சொலமன் சிறிலை, மேயர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர்களும், கட்சி உயர் மட்டத்தில் ஒரு சிலரும் விரும்புகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உயர் மட்டத்திலுள்ள ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (05.03.2023) யாரை மேயர் பதவிக்கு நிறுத்துவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படலாம் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.