அதிரடிப்படை துப்பாக்கிப் பிரயோகம் வடமராட்சியில் - இருவர் பரிதாப நிலை !

16.04.2021 09:20:17

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலேயே இருவர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரின் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இன்று காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கெப் ரக வாகனத்தை விசேட அதிரப் படையினர் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.

மணல் அகழ்வை தடுப்பதற்காக பாதையில் ஆணிப் பலகைகள் மற்றும் கம்பிகள் போடப்பட்டுள்ளன. எனினும் கப் ரக வாகனம் நிறுத்தாமல் சென்ற நிலையில் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலையைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை நெல்லியடி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.