இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !

19.02.2021 10:08:02

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வுக்குறித்து தம்மிகா பிரசாத் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கும் இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன்.

நான் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளேன், ஏற்கனவே எஸ்.எஸ்.சி-க்கு 19 ஆண்டுகளாக விளையாடியுள்ளேன்’ என கூறினார்.

37 வயதான பிரசாத், 25 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் மற்றும் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடி மொத்தம் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் டெஸ்டில் 75 விக்கெட்டுகளும் 32 ஒருநாள் விக்கெட்டுகளும் அடங்கும்.

2006ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான தம்மிகா பிரசாத், இறுதியாக 2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

2015ஆம் ஆண்டுக்கு பிறகு தோள்பட்டை காயம் காரணமாக கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்த அவர், அதன்பிறகு மீண்டும் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கவில்லை.

2002ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.சி.யைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவரும் பிரசாத், 130 போட்டிகளில் இருந்து 29.1 சராசரியாக மொத்தம் 351 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.