வரப்போகும் புதிய அரசுக்கு உதவுவோம்

04.05.2021 10:39:26

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, நல்ல பணிகளைத் தொடர வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க.வின் வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வியடைந்தார்.

இதன் பின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், “ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பமாகிறது. மக்களின் தீர்ப்பை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எழிலன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். எது எப்படியோ, நான் தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசியில் மக்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்களின் முடிவு பணிவோடு ஏற்கப்பட்டது” என்று டுவீட் செய்திருந்தார்.

இதன் பின்னர் தி.மு.க.வின் டுவிட்டர் பக்கத்தையும், மு.க.ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள குஷ்பு “நாம் ஒற்றுமையோடு நிற்போம். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை இன்னும் சிறப்பானதாக்க வரப்போகும் புதிய அரசுக்கு உதவுவோம். தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை தனது வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் முன்னெடுத்துச் செல்வார் என்று நான் நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.