பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

04.02.2023 13:05:00

பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.

’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர், தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த வாணி ஜெயராம் 3 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். அண்மையில் இவருக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் ’பத்மபூஷண் விருது’ அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 78 வயதாகும் வாணி ஜெயராம் இன்று காலமானார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் திடீரென மயக்கமடைந்த அவர், உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.