ஓய்வுநிலை ஆயர் மறைந்தஇராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

05.04.2021 07:38:40

 

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் காலை 7.30 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் ஆரம்பமானது.

நிகழ்வில் ஆயரின் திருவுருவப்படத்திற்கு நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.சிறிதரன் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் சிம்மையா மிசன் குரு உள்ளிட்டோர் ஈகைச்சுடர் ஏற்றினர்.

அதன் பின்னர், அன்னாரின் மறைவுக்கான விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில்,  கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்கள், கிளிநொச்சி சிம்மையாமிசன் குரு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.