திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்

01.03.2023 15:30:39

தமிழ்நாடு முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சென்னையில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போது முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூகநீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன. எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். எங்களது இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல.எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.