சீன மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து அமைச்சரவை ஆய்வு !

20.02.2021 11:22:54

 

இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக  ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், யாழ்ப்பாணத்தின் நாகதீபம், அனலைதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனா தெரிவு செய்யப்பட்டமைக்கு, இந்தியா எதிர்ப்பு வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சர்வதேச ரீதியான ஏல விற்பனை நடைமுறைகளுக்குப் பின்னரே சீன நிறுவனமொன்றுக்கு குறித்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த மின் உற்பத்திக்கு  டீசல் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் செலவினம் மிக அதிகமாக காணப்படுகின்றது.

ஆகவேதான் மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் வட.பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்தை இரத்து செய்வதற்கான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.