பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில் வலியுறுத்து

15.05.2021 11:31:22

தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பிளக் பங்கஸ் தொற்றும் பரவிவருவதை சுட்டிக்காட்டி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் நாட்டில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அரசாங்கம் அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி முழுவதுமாக செலுத்தப்படும் வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே, மருத்துவ ஆலோசனைகளின்படி மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, நாட்டை முடக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தால் அதனை செயற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்திற்கு ஒரு அபாயகரமான அடியாக இருந்தாலும் நோய்கள் பரவுவதை நிறுத்தி உயிரைக் காப்பாற்றுவது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை எம்மால் சரிசெய்ய முடிந்தாலும் மனித உயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை ஒருவர் சரிசெய்ய முடியாது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.