வீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல் !

13.05.2021 12:24:44


தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை இன்று (வியாழக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வேலைக்குச் செல்லும் மக்கள் மட்டுமே இன்று வீடுகளைவிட்டு வெளியேற முடியும் என்றும் கூடுதலாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவசர தேவைக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியேற முடியும் என்றும் பொலிஸார் கண்டிப்பாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் அந்த நாளுக்கு அடையாள எண் செல்லுபடியாகும் பட்சத்தில் மட்டுமே அவ்வாறு வெளியில் செல்ல முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அடையாள எண் முறையின் அடிப்படையில், 1,3,5,7,9 இலக்கங்களுடன் முடிவடையும் அடையாள அட்டை எண்கள் இன்று (வியாழக்கிழமை) செல்லுபடியாகும்.

அன்றைய அடையாள எண்களின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே இன்று முதல் மே 31 வரை தினசரி இயக்கங்கள் அனுமதிக்கப்படும்.

அதன்படி தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1, 3, 5, 7, 9) இருப்பின் அன்றைய நாளின் திகதியின் இலக்கம் ஒற்றை இலக்கமாகவும் அது இரட்டை இலக்கமாக (0, 2, 4, 6, 8) இருப்பின் இரட்டை இலக்கமுடைய திகதியிலும் வீட்டை விட்டு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டின் இலக்கத்தை பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டைவிட்டு வெளியேற அனைத்து வகையான அடையாளங்களையும் பயன்படுத்தி யாராவது அதிகாரிகளை ஏமாற்ற முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை பொருந்தாது என்றும் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும் மருத்துவ காரணங்களுக்காக ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்கு அடையாள அட்டை தேவையில்லை என்றும் அவர் கூறினார்.