மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்!

04.04.2023 20:00:00

இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தன.

சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கைளை மாற்று, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கு, பொது சொத்துக்களை விற்பதை நிறுத்து போன்ற பல விடயங்களை முன்வைத்து தொழிற்சங்கங்கள் இன்று தங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ரணிலுக்கு எதிரான பாரிய போராட்டம்

இலங்கை மக்களுக்காக போராட அனைத்து தொழிற்சங்கங்களும் முன்வந்திருப்பதாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையெனவும் சுகாதார தொழிற்சங்க நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவியின் மூலம் நாட்டை கட்டியெழுப்பலாம் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தாலும், இதுவரை நிதியத்தின் உதவியை பெற்ற எந்தவொரு நாடும் முன்னேறியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மக்களை பாரியளவில் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாகவும் இதனை எதிர்த்து போராடும் மக்களுக்கு எதிராக அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

இதேவேளை, வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சிறிலங்கா அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்வதையும் குறித்த இடங்களுக்குள் பிரவேசிப்பதையும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும், அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடை செய்யுமாறும் கோட்டை நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாரிய பேரணி

இந்த தடை உத்தரவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த சமரசிங்க, பந்துல சமன் குமார, ரவி குமுதேஷ் மற்றும் உதேனி திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில், உரிய உத்தரவை வாசித்து ஒப்படைக்குமாறும், சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டால், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதவான் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். 

இந்த போராட்டத்தில், பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.