பனிப்போருக்குள் இரையாகிய இலங்கை !

16.05.2021 10:55:38

அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய பலவந்த நாடுகளின் பனிப்போருக்கு இலங்கை இரையாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

முழு நாடும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதை விட சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தேவையாகவுள்ளது.

அடுத்த மாதம் சீன வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. 19, 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் மீதான விவாதம் இடம்பெற்று 20 ஆம் திகதி வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

சட்ட மூலம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு 18 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு ஆர்வம் காண்பிக்கிறது ?

துறைமுக நகர வேலைத்திட்டம் 2014 க்கு முன்னர் ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். சீனாவிற்கு வழங்கப்பட்டிருந்த துறைமுக நகரை 2015 இல் நல்லாட்சி அரசாங்கமே மீள பெற்றுக் கொண்டது. அத்தோடு நிரந்தரமாக அன்றி 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் இதனை சீனாவிற்கு முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு பாரிய பாதிப்பாகும்.