நயன்தாரா பாணியில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்

05.04.2021 08:19:25

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம்.

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது, அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.  

இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி இப்படத்தை நயன்தாராவின் ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறதாம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறாராம். 

மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறாராம். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.