ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த முயற்சி

31.03.2023 16:21:16

அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல்வேறு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்குப் போவதாக பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.

இது எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

சரியான பொருளாதார நோக்குடன் தூய்மையான ஆட்சி

 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், சரியான பொருளாதார நோக்குடன் தூய்மையான ஆட்சியை விரும்பும் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சிக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டுவரப்படுகிறதா அல்லது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொண்டுவரப்படுகிறதா அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கங்களுடன் கொண்டுவரப்பட்டதா என்ற கேள்வி எமக்கு உள்ளது.

இந்தச் சட்டத்தின் போர்வையில் அனைத்து தொழிற்சங்கங்களையும் நசுக்குவதற்கும், அனைத்து மக்கள் போராட்டங்களையும் நசுக்குவதற்கும், அனைத்து தொழில் சார் மக்களின் உரிமைகளையும் நசுக்குவதற்குமே இதனூடாக செயற்படுவதைக் காணமுடிகிறது. அதன் சரத்துக்கள் இதையே புலப்படுத்துகின்றன.

ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த முயற்சி

இந்த அனைத்து தொழிற்சங்க உரிமைகளும், போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி நசுக்குவதற்கு இடமளிக்கும் விதமாக தயாராகி வருவதாகவே புலப்படுகிறது.

எனவே தொழில் சார் உரிமைகளுக்கும், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும் எதிராக அரசாங்கம் செயற்படுவதைக் காணமுடிகிறது. சகல தொழிற்சங்கப் போராட்டமும் நியாயமானது என்று நாம் கூறவில்லை. நியாயமற்ற தொழிற்சங்க தலையீடுகளை நாம் அதிகம் பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு வெளியே சென்று தொழிற்சங்கப் போராட்டங்களை நசுக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தினால், அதன் மூலம் மனித உரிமைகள் உட்பட மக்களின் சகல உரிமைகளையும் நசுக்கி நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்பதுவே இதன் மூலம் தெளிவாகின்றது” - என்றார்.