சீனாவை சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் குழு!

14.01.2021 13:42:29

 

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணையைத் தொடங்க உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு சீன நகரமான வுஹானை சென்றடைந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விசாரணை வருகிறது.

ஆரம்பகால தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடல் உணவு சந்தையைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ய 10 விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 முதன்முதலில் மத்திய சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) காலை அணியின் வருகை நாட்டின் வடக்கில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் எழுவதோடு ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் வுஹானில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அவர்கள் தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். இது சீன அதிகாரிகள் வழங்கிய மாதிரிகள் மற்றும் ஆதாரங்களை நம்பியிருக்கும்.

இந்த மாத தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு தனது விசாரணையாளர்கள் சீனாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டதாகக் கூறியது. ஆனால் பெய்ஜிங் இது ஒரு தவறான புரிதல் என்றும், விசாரணைக்கான ஏற்பாடுகள் இன்னும் விவாதத்தில் உள்ளன என்றும் கூறியது.

முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.