மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமா தமிழ் காங்கிரஸ்? - சீண்டுகிறார் செல்வம்.

27.02.2023 21:27:23

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

ஏனெனில் தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும் பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள். தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.