ஐரோப்பிய யூனியன் தூதர் மீது தாக்குதல்

18.04.2023 07:44:15

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது. எனினும், சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்து தற்போது 200 ஆக உயர்ந்து உள்ளது. 1,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இந்த ராணுவ மோதலில் சிக்கி ஐ.நா. பணியாளர்களும் உயிரிழந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த மோதலில் துணை ராணுவ தளங்கள் மீது சூடான் ராணுவம் வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட தொடங்கியது. இந்த சூழலில், சூடான் மோதலில் ஐரோப்பிய யூனியன் தூதர் ஒருவரை அவரது இல்லத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சூடானின் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி இந்த வன்முறை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. போராளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காயமடைந்து உள்ளனர் என சூடானுக்கான ஐ.நா. தூதர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் இந்த மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோளும் விடுத்து உள்ளது. எனினும், மோதலில் ராணுவத்தின் கை மேலோங்கி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் முழுமை அடையவில்லை. சூடானின் கிழக்கு பகுதிகள் மற்றும் செங்கடல் துறைமுக பகுதிகள் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என ராணுவ படைகள் கூறுகின்றன. ஆனால், தெற்கே கோர்டோபான் நகரில் வலுவாக துணை ராணுவ படை உள்ளது. இந்த பகுதியிலும், டார்பர் பகுதியிலும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.