உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதில் இலங்கை உறுதியாக உள்ளதாம்!

09.03.2023 21:53:19

சுயாதீன உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது என்று ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 06 ஆவது மீளாய்வுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி இந்த நெருக்கடியிலிருந்து வெகுவிரைவில் நிரந்தரமாக மீள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமூக – பொருளாதார உறுதிப்பாட்டை அடைவதிலும், மீட்சியை நோக்கிப் பயணிப்பதிலுமே அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது. அதனை சர்வதேச நாணய நிதி யத்துடனும் ஏனைய சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து முன்னெடுப் பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த ஆண்டு ஒக்ரோபரில் நாடாளுமன்றத்தில் அரசமைப்புக்கான 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை வலுப்படுத்தப்பட்டது.

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஊடாக தேர்தலின்போதான அநாவசிய செலவினங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன், அச்செலவினங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக சுயாதீன உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதில் இலங்கை முன்னின்று செயலாற்றி வருகின்றது. அதற்கமைய அரசமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.

அந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இணங்கி யிருப்பதுடன், அதற்குரிய சட்ட வரைவை தயாரிப்பதற்கான அமைச்சரை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு அதன் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்றார்.

அதுமாத்திரமன்றி நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயல்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணை செயன்முறைகள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நிதி ஒதுக்கீடு, வட- கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற காணி விடுவிப்பு, நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதி பதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சிக்கூட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.