மத்திய அரசு ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை !

22.04.2021 10:43:42

இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், 10 இலட்சம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 11 இலட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை மாநில அரசுகளுக்கு  வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த மருந்துகளையும், ஒக்சிஜன் சிலிண்டர்களையும் விநியோகிக்கும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேற்படி மருந்து மற்றும் ஒக்சிஜனின் தேவை அதிகமாகவுள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மருந்துகளை விநியோகிப்பதற்கும், நோயாளிகளை வேறு சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றுவதற்கும் மத்திய அரசு விமானப்படையினரின் உதவியை கோரியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாட்டு அதிகம் இருப்பதால் குறித்த மருந்து உற்பத்தியை இரு மடங்காக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 14 ஆம் திகதியில் இருந்து  ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.