மூவாயிரம் அரச ஊழியர்களின் குடும்பம் நிர்க்கதியில்

21.03.2023 22:35:26

 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள சுமார் மூவாயிரம்   அரச ஊழியர்களின்,  தேர்தல் நாளுக்கு நாள் தாமதமாகி வருவதை அடுத்து சம்பள இழப்பினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்காரணமாக அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியில் பாகுபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறாத காரணத்தினால் இந்த அரச உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அடிப்படை சம்பளம்

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, உள்ளுராட்சி சபை தேர்தல் தாமதத்தை அடுத்து இந்த அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்குமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.