ரோஸி சேனநாயக்க அதிருப்தி - திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த கரோலின் ஜூரி

06.04.2021 08:20:42

 

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியின்போது, கரோலின் ஜூரியின் நடத்தையை பார்த்து வெறுப்படைந்ததாக கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கரோலின் ஜூரி, குறித்த நிகழ்வில் செயற்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரை தடாகத்தில் நேற்று முன்தினம், (ஞாயிற்றுக்கிழமை) 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை  இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. அதில் ரோஸி சேனநாயக்கவும் விசேட அதிதியாக பங்கேற்றிருந்தார்.

குறித்த போட்டியின் உண்மையான  வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவை வாழ்த்துவதற்காக நிகழ்வில் காத்திருந்த அவர், சம்பவம் நடப்பதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறி இருந்தார்.

இதன்போது நிகழ்வில் நீதிபதியாக  இருந்தவர்கள், திருமதி இலங்கையின் வெற்றியாளராக புஷ்பிகா டி சில்வாவை தேர்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வெற்றியாளருக்கு கரோலின் ஜூரி முடிசூட்டினார். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, மேடைக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் ஏற்பாட்டுக்குழு, புஷ்பிகா டி சில்வாவை மீண்டும் வெற்றியாளராக அறிவித்ததுடன் கிரீடத்தை அவரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க அதிருப்பதி வெளியிட்டதுடன் அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் பெண்களை ஆதரிக்க வேண்டும். மாறாக பெண்களை ஆதரிக்க முடியாவிட்டால், வாயை சரி மூடிக்கொண்டிருக்க வேண்டும்”என கரோலின் ஜூரியின் நடத்தை குறித்து அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் திருமதி இலங்கைக்கான தேசிய இயக்குநர் சந்திமல் ஜெயசிங்க,  புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றார் என்ற கூற்றை ஆதரிக்க ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புஷ்பிகா டி சில்வா மீண்டும் வெற்றியாளராக இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில், கிரீடம் அணிவித்து அறிவிக்கப்படுவார் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.