சுப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி !

26.04.2021 11:07:31

 

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரித்வீ ஷா 53 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், கவுல் 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை சமநிலை செய்தது. இதனால் போட்டி சுப்பர் ஓவருக்குள் நுழைந்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் ஜோனி பேயர்ஸ்டொவ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், அவீஷ்கான் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் அமித் மிஸ்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து நகர்ந்த சுப்பர் ஓவரில், முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, இறுதி பந்தில் வெற்றி இலக்கை கடந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 39 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக 53 ஓட்டங்கi பெற்றுக்கொண்ட பிரித்வீ ஷா தெரிவுசெய்யப்பட்டார்.