ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்- ஐ.நாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

03.04.2021 10:21:27

நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து, ஈழத் தமிழ் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைக் கடிதத்தை ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையாருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

உலகில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐ.நாவின் அறிக்கையொன்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா தொடர்பான ஐ.நா. உள்நாட்டு மறுஆய்வு அறிக்கையின் படி, 2009 ஆண்டின் இறுதிப் போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட தமிழ் அகதிகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஸ்ரீலங்கா இராணுவ மற்றும் உளவுத்துறையிடமிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளை, சந்திக்கவும், அவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிகளை வேண்டுமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

தமிழ் அகதிகளை நாடுகடத்த வேண்டாமென ஜேர்மன் வெளிவிகார அமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.