மீனவர்கள் அறிவித்த சாலைமறியல் போராட்டம் ஒத்திவைப்பு - கன்னியாகுமரி

19.02.2021 10:19:05

கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி 22-ந்தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்ைதயில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்தும் உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரியும் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் போராட்டம் குறித்து அறிந்த அதிகாரிகள் கன்னியாகுமரி ஊர் பங்கு பேரவை நிர்வாகிகளை அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சின்னமுட்டம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த இந்த சமரச பேச்சுவார்த்தை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை தலைமையில் நடந்தது.

இதில், அரசு தரப்பில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், நாகர்கோவில் பொதுப்பணித்துறை கடல் அரிப்பு தடுப்பு கோட்ட உதவி பொறியாளர் விஜயகுமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கன்னியாகுமரி ஊர் பங்குப்பேரவை சார்பில் பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிக்கு மாசுகட்டுப்பாட்டுவாரியம் மற்றும் கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறை சட்டவிதியின்படி அனுமதிபெற்று விரைவில் தூண்டில் வளைவு அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 22-ந் தேதி நடைபெற இருந்த சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை ஊர் நிர்வாகிகள் தற்காலிகமாக ரத்து செய்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அடுத்த மாதம் (மார்ச்) 30-ந் தேதிக்குள் தூண்டில் வளைவு பாலம் பணியை தொடங்காவிட்டால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னியாகுமரி பங்கு பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது.