ரணிலுக்கு சவாலாக மாறிய மகிந்த

26.02.2023 00:07:25

இலங்கையில் நடைபெறவிருந்த தேர்தலை ஒத்திவைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுத்த முடிவை தாம் எதிர்ப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாதெனவும் தேர்தலை நடத்த வேண்டியது அதிபரின் கடமை எனவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இலங்கையில் நடைபெறவிருந்தஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்  உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் எதிர்நோக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு அச்சம் இருப்பதாகவும், இதனடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை எனவும் தேர்தலில் வெற்றி பெறும் ரகசியத்தை தாம் அறிந்திருந்ததுடன், அதனடிப்படையில் கடந்த காலங்களில் வெற்றியீட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி

அத்துடன், இலங்கையில் தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியுமென   மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு திறமை இருக்க வேண்டுமெனவும் அதற்கேற்ப செயற்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.