தடுப்பூசிக்கு பற்றாக்குறையா ?

04.06.2021 10:42:53

 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை உண்மையில் தவறானவை. எந்த அடிப்படையும் இல்லாதவை.

தமிழ்நாட்டிற்கு ஜுன் 2 ஆம் திகதி நிலவரப்படி 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 93.3 இலட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. 7.24 இலட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் இருப்பு உள்ளன.

ஜுன் 1-15 கால கட்டத்தில் மத்திய அரசின் வாயிலாக மாநிலத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அளவு 7.48 இலட்சம் ஆகும். ஜுன் மாதம் 15-30 கால கட்டத்துக்கு 18.36 இலட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.