கிளர்ச்சியாளர்கள் பிடியில் நியூசிலாந்து விமானி

18.04.2023 07:42:13

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிளர்ச்சி படை கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், கடந்த 2 மாதங்களாக இதுபற்றி எழுதி வந்த கடிதங்களும் புறக்கணிக்கப்பட்டன. இதன்பின், நியூசிலாந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சி படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானி பிலிப் மெர்தன்ஸ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுசி ஏர் வர்த்தக விமானத்தில் டுகா பகுதியில் அமைந்த பாரோ விமான நிலையத்தில் சென்று இறங்கி உள்ளார். அவரை கிளர்ச்சியாளர்கள் படை பணய கைதியாக பிடித்து சென்றது. அவரை மீட்க இந்தோனேசியா ராணுவம் முயற்சித்து வருகிறது. இதில், விமானி பிலிப் அடைத்து வைக்கப்பட்டு இருக்க கூடும் என நம்பப்படும் பகுதியை ராணுவ வீரர்கள் வளைத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களை கிளர்ச்சியாளர்கள் படை துப்பாக்கிகளால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் வீரர் ஒருவரின் உடலை ராணுவத்தினர் மீட்டு உள்ளனர். கிளர்ச்சியாளர்கள் படை, டுகா பகுதிக்கு உட்பட்ட யால் மற்றும் முகி ஆகிய 2 மாவட்டங்களில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. அவர்களிடம் மீதம் 12 வீரர்களின் உடல்கள் உள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன