தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1 இலட்சம் பொலிஸார்

20.02.2021 11:28:02

தமிழக சட்டசபை தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 1 இலட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என கூறப்படுவதுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக தேர்தல் ஆணையகம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேர்தலையொட்டி 54 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

ஏற்கனவே அனைத்து மாவட்ட பொலிஸ் திணைக்களங்களுக்கும் பொலிஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் 1 இலட்சம் பொலிஸாரர் உள்ளனர். இவர்கள் அனைவருமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  இந்த முறை தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பே துணை இராணுவப்படைகள் வருகிறது. கடந்த தேர்தல்களில் முறைகேடுகள் பெருமளவு நடந்தன.  அவை நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.