ஐ.நா மனித உரிமை அமர்வுக்கு முன்னர் கோட்டாபய எடுக்கவுள்ள நடவடிக்கை

18.01.2021 09:52:21

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகளுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தலைமையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கையில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும் புதிய ஆணைக்குழு அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்த முழுமையான அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆணைக்குழு சமர்ப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.