ஒக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் கொரோனா நோயாளிகள்

23.04.2021 09:54:10

டெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் ஒரு சில மருத்துவ மனைகளில் ஒக்சிஜன் சிலிண்டருடன் வந்தால் தான் கொரோனா நோயாளிகள்  அனுமதிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

இதேவேளை மாகராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயில் கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கு முன்பதாக நாசிக்கில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.