எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

23.02.2023 08:07:52

பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் கூறி இருப்பதாவது:- எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற புதிர் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். பா.ஜனதாவின் போலி தேசியவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் விஷத்தை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் பா.ஜனதாவுடன் தனித்தனியாக போராடி வருகின்றனர். இதுபோன்ற அரசியல் அணுகுமுறைக்கு எந்த அர்த்தமும் இல்லை. காங்கிரசை வெறுத்து ஒதுக்கிவிட்டு பா.ஜனதாவை எதிர்த்து எப்படி போராடுவீர்கள்?. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பின்னர் சிந்திக்கவேண்டும். அதற்கு முன்பு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்தாலோசித்து தங்களின் வியூகத்தை இறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும். பணமும் அதிகார ஆணவமும் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் அரசியல் ஆயுதங்களாக மாறிவிட்டன. நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலிமையான மற்றும் முதிர்ச்சி பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளார். ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- கவுதம் அதானியின் தொடர்பு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசும்போது, பிரதமர் பதில் சொல்ல முடியாமல் பலமுறை தண்ணீர் குடித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு அர்த்தம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பது தான்.