பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விலகல் !

06.04.2021 08:48:07

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுக்கை சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான், உபாதைக் காரணமாக நடப்பு தென்னாபிரிக்கா தொடர் மற்றும் எதிர்வரும் சிம்பாப்வே அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தை தவறவிடுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த சதாப் கானுக்கு இடது கால்விரலில் காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே சோதனையின் போது அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதனால் அவரை எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு ஓய்வில் இருக்கும் படி, மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. ஆகையால் அவர் எதிர்வரும் போட்டிகளை தவறவிட நேரிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொடையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சதாப் கான், நியூஸிலாந்து டெஸ்ட் மற்றும் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.