15 வருடங்களின் பின் விடுதலையான தமிழ் அரசியல் கைதி

16.05.2023 16:11:19

2006 ஆம் ஆண்டு பித்தல சந்தியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதே இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார்.

கொலைக்குச் சதி செய்ததாக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், பிரதிவாதிக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

43 வயதான ஆரூரன், 2004 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கற்கும் போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.