பதவியை இராஜினாமா செய்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு !

23.02.2021 07:18:33

 

புதுச்சேரி முதல்வர் பதவியை இராஜினாமா செய்வதாக நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியமையால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால் எதிர்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

குறித்த கோரிக்கைக்கு அமைய துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது குறித்த தீர்மானத்தை நாராயணசாமி முன்மொழிந்து உரையாற்றினார்.

இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நாராயணசாமியுடன், தி.மு.க , காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனை அடுத்து ஆளுநர் தமிழிசையை சந்தித்த நாராயணசாமி, முதலமைச்சர், அமைச்சர்களின் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர், ஆளுநரிடம் எங்களுடைய இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளோம். இனி முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.