அணிகளின் பலம்- பலவீனம் குறித்த ஓர் அலசல் ஐ.பி.எல். ரி-20 லீக் !

09.04.2021 11:13:46

உலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயம், இன்று முதல் எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.

முதலாவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றிக் கொண்டு புத்துணர்ச்சியுடனும், வலுவான வீரர்கள் வரிசையுடனும் களமிறங்கியுள்ள அணி குறித்த பார்வை இது…

டெத் பௌலிங், நடுத்தர வரிசை துடுப்பாட்டத்தால் கடந்த காலங்களில் தள்ளாட்டத்தை எதிர்கொண்ட பஞ்சாப் அணி, இதுவரை ஐ.பி.எல். தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லாத மூன்று அணிகளில் ஒன்றாக திகழ்கின்றது.

கடந்த சீசனை 6ஆவது இடத்துடன் நிறைவு செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் சற்று தடுமாறினாலும் பின்னர் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்து முன்னேறி வந்தபோதும் குறுகிய இடைவெளியில் பிளே-ஒஃப் வாய்ப்பை தவறவிட்டது.

இம்முறை கடந்த சீசனில் ஒரஞ் தொப்பியை தன் வசமாக்கியிருந்த அணித்தலைவர் லோகேஷ் ராகுல், இம்முறை அணியை கடந்த கால அனுபவத்துடன் சிறந்தமுறையில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் என முதல் நான்கு இடங்கள் வலுவாக உள்ளது. மேக்ஸ்வெல் இல்லாத இடத்தை மொய்சஸ் ஹென்ரிக்ஸ், தமிழகத்தின் புதிய வீரர் ஷாருக் கான் ஆகியோர் நிரப்ப முயற்சி செய்வர். அத்துடன் தீபக் ஹூடா, பெபியன் ஆலன் ஆகியோரும் வலு சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில், மொஹமட் ஷமி, ஜை ரிச்சர்ட்சன், மெரிடித், கிறிஸ் ஜோர்தான் உள்ளிட்டோர் ஆதிக்கம் செலுத்துவர்.

தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பஞ்சாப்புக்கு குறையாக இருக்கிறது. கடந்த சீசனில் சோபிக்காமல் போன கிருஷ்ணப்பா கௌதமை விடுவித்துவிட்டதால், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோரைக் கொண்டு சுழற்பந்துவீச்சை சரி செய்ய பார்கிறது பஞ்சாப்.

நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் எதிர்வரும் 12ஆம் திகதி ராஜஸ்தான் றோயல்ஸை மும்பையில் எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.

அடுத்ததாக இருமுறை சம்பியனான கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி குறித்து பார்க்கலாம்.

கௌதம் கம்பீர் சென்ற பிறகு தன்னை நிலையான ஒரு அணியாக மாற்றியமைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி, இம்முறை சாதிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

கடந்த சீசனில் டொப் ஆர்டர் முதல் கடைசி துடுப்பாட்ட வீரர் வரை நிலையான வரிசையை நிர்ணயிக்க அந்த அணியால் இயலவில்லை. பாதியில் அணித்தலைமை மாறியும் அதற்குப் பலனில்லை.

ஆந்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன் ஆகியோர் சிறந்த நிலையில் இல்லாததும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது முறையாக பிளே-ஒஃப் வாய்ப்பை தவறவிட்ட கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கன், முழுநேர தலைவராக மாறியிருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது.

தனது பிரதான வீரர்களை தக்க வைத்துக்கொண்டு, சமீபத்திய ஏலத்தில் சில முக்கிய வீரர்களான ஷகிப் அல் ஹசன், பென் கட்டிங் ஆகியோரை எடுத்திருப்பது அணிக்கு பக்க பலமாக இருக்கும். அத்துடன் பெட் கம்மின்ஸ், லொக்கி ஃபெர்குசன் ஆகியோரும் அணிக்கு துணை நிற்பார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறும் கொல்கத்தா அணி, இம்முறை புதுவரவுகளான ஷகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங்கை பயன்படுத்திக்கொள்ள முற்படும். வருண் சக்கரவத்தியின் நிலை குறித்து உத்தியோகபூர்வ தகவல் இல்லை.

நடப்பு தொடரின் தனது முதல் போட்டியில் எதிர்வரும் 11ஆம் திகதி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை சென்னையில் சந்திக்கிறது.

அடுத்து 2016ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி குறித்து பார்க்கலாம்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணி கடந்த 5 ஆண்டுகளில் நிலையான ஒரு இடத்தில் உள்ளது.
நடப்பு தொடரில் வாங்கப்பட்டிருக்கும் கேதர் ஜாதவ், நடுத்தர வரிசையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மிட்செல் மார்சுக்கு பதிலாக உள்வாங்கப்பட்டுள்ள ஜேஸன் ரோய்யை, எந்த இடத்தில் களமிறக்குவது என்பது குறித்து அணி ஆலோசித்து வருகின்றது.

அணியின் துடுப்பாட்ட வரிசை வோர்னர், ஜோனி பேயர்ஸ்டொவ், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ரித்திமான் சாஹா என பலமாக உள்ளது.

பந்துவீச்சிலும், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, ஜேஸன் ஹோல்டர், ரஷீத் கான், நடராஜன் என வலுவாக உள்ளது.

அடுத்ததாக ஐ.பி.எல். தொடரில் 5 முறை சம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையுடன் வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, துடுப்பாட்டம், சகலதுறை மற்றும் பந்துவீச்சு என மூன்றிலும் வலுவாக திகழும் ஒரே அணியாகவும் உள்ளது.

ரோஹித் சர்மா, குயிண்டன் டி கொக், சூர்யகுமார், இஷான் கிசான், பாண்ட்யா சகோதரர்கள் மற்றும் பொல்லார்ட், பும்ரா மற்றும் போல்ட் என மிகப்பெரிய படையணி உள்ளது.

சுழற்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் இல்லாதது மும்பைக்கு குறையாக உள்ளது. அதிலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் முதல் போட்டியில் மும்பை விளையாடுவது சற்று தடுமாற்றத்தை அளிக்கலாம்.

தனது முதல் லீக் போட்டியில், நடப்புச் சம்பியனான மும்பை அணி, றோயல் செலஞ்சரஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பியூஷ் சாவ்லா, ஜெயந்த் யாதவ் உள்ளிட்டோர் அதை எவ்வாறு ஈடு கட்டுவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்ததாக 3 முறை சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதல் முறையாக கடந்த சீசனில் பிளே-ஓஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அதிக வீரர்களை கொண்ட ஒரே அணியாக அந்த அணி திகழ்கின்றது.

நடப்பு தொடரில் அணிக்குத் திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னா துடுப்பாட்;டத்தில் வலுசேர்ப்பார். டோனியின் தலைமை கூடுதல் பலம்.

டூ பிளெஸ்ஸிஸ், ராயுடு, பிராவோ, ஜடேஜா, சேம் கர்ரன், மொயீன் அலி, லுங்கி ங்கிடி என பல சிறந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, கடைசி நேரத்தில் ஜோஷ் ஹேஸில்வுட் நடப்பு தொடரில் இருந்து விலகியிருப்பது சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பெரிதும் மாற்றம் செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதல் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதற்கு பிறகு வேறு எந்த தொடரிலும் சோபிக்கவில்லை.

அணியின் தலைவராக சஞ்சு சம்சனும், அணியின் கிரிக்கெட் இயக்குநராக இலங்கையின் குமார் சங்ககாராவும் பொறுப்பேற்றுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச மதிப்பாக 16.25 கோடி ரூபாய் கொடுத்து தென்னாபிரிக்க சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் வாங்கியுள்ளது.

இதுதவிர அணி வலுவான அணியாக உள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர் என பலம் பொருந்திய வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை முக்கிய பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளில் விளையாடாதது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அணித்தலைவராக முன் அனுவம் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு, தற்போது அந்தப் பொறுப்பால் ஏற்படும் அழுத்தம் அவரது துடுப்பாட்ட திறனை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

அடுத்ததாக ரிஷப் பந்த் தலைமையில் களம் காணும் டெல்லி கெபிடல்ஸ் அணி குறித்த பார்வை.

கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி கிண்ணத்தை பறிகொடுத்தது டெல்லி அணி. ஸ்ரேயஸ் ஐயரின் உபாதைக் காரணமாக அணித்தலைமை பொறுப்பை ஏற்றுள்ள ரிஷப் பந்த், அணியை எவ்வாறு வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

துடுப்பாட்டம் மற்றும் வேகப்பந்துவீச்சில் நிலையான வீரர்களுடன் திறமையான அணியாக டெல்லி உள்ளது. தவான், பிருத்வி ஷா, ரஹானே, சிம்ரொன் ஹெட்மியர் மற்றும் பந்துவீச்சில் ரபாடா, நோட்ஜே இஷாந்த் சர்மா, அஸ்வின், அக்ஸர் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.

தற்போது ஸ்டீவ் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இணைந்திருப்பது கூடுதல் பலம்.
குறிப்பாக விக்கெட் காப்பு பணியில், ரிஷப் பந்த்துக்கு மாற்று இல்லாத நிலை உள்ளதை அணி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இம்முறையாவது சம்பியன் கிண்ணத்தை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லுமா என்பதே அனைத்து ஐ.பி.எல். இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என செல்லிவிடலாம்.

கடந்த காலங்களில் பலம் பொருந்திய வீரர்கள் இருந்த போதிலும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் சிறப்பான பெறுப்பேற்றை வெளிப்படுத்த முடியவில்லை என்பது யாவரும் அறிந்ததே!

இம்முறை அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் என முக்கியமான வீரர்களை பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

எதிர்வரும் தொடரை முன்னிட்டு அணியிலிருந்த 10 வீரர்களை விடுவித்து, துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்தும் வீரர்களை சமீபத்தில் நடைபெற்ற சிறிய ஏலத்தில் வாங்கியது.

பெங்களூரின் வேகப்பந்துவீச்சு சற்று கவலை அளிப்பதாகவே இருக்கிறது. நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோர் ஓட்டங்களை வாரி வழங்குவது பிரச்னையாக உள்ளது. இம்முறை அதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேன் ரிச்சட்சனின் செயற்பாடு மற்றும் கைல் ஜேமிசனின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.