
இழுவை வலை தொழிலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது
அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பில் இழுவை வலை தொழில் மேற்கொள்ளப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
இலங்கையின் வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (03) கச்சதீவில் இடம்பெற்ற நல்லெண்ண கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக கலந்து கொண்டதன் பின்னர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் விரைவில் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்திற்கு சுமூகமான நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோன்று, காரைக்கால், நாகப்பட்டினம், புதுகோட்டை போன்ற பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தினர்.
சந்திப்பின் ஏற்பாட்டாளர் என்ற அடிப்படையில், நடுநிலையாக இரண்டு தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கருத்துக்களை அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் எம். சி. முணுச்சாமி, பாதிய ஜனதா கட்சியின் நாகபட்டினம் மாவட்ட தலைவர் அருணாசலம், திராவிட முன்னேற்ற கட்சியின் நாகபட்டினம் மாவட்ட பதில் தலைவர் ஜி. மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களை புரிந்து கொள்வதாகவும், சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.