திமுகவில் சேர்ந்த ரஜினி மன்ற செயலாளர்கள்…

18.01.2021 10:11:17

ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது என்ன விதமான பலத்தை அந்தக் கட்சிக்குத் தரும்?ரஜினி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் சில கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக நிலவிய நம்பிக்கை மீது இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நடந்தது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகிய நான்கு பேர்தான் தற்போது திமுக-வில் சேர்ந்துள்ளவர்கள்.

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருந்தவரை அவரது ஆன்மிக அரசியல் என்ற முழக்கமும், அவரது நிலைப்பாடுகளும் பாஜக-வின் கருத்தியலுக்கு இசைவான அணுகுமுறை என்று பார்க்கப்பட்டது.இந்த அணுகுமுறையோடு அவர் அரசியலுக்கு வந்தால் அது, தமிழ்நாட்டின் திமுக- அதிமுக என்ற அரசியல் சமன்பாட்டில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தி பாஜக காலூன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் பரவலாக கருதப்பட்டது.

ஆனால், ரஜினி தமது அரசியல் திட்டத்தை கைவிடுவதாக கூறிய நிலையில், அது பாஜக ஆதரவு வட்டாரங்களில் ஒரு சோர்வை ஏற்படுத்தியது.

ஆனால், அதே நேரம், ரஜினி களத்தில் இருந்திருந்தால், அது திமுக-வுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட உதவியிருக்கும். இப்போது ரஜினி தன் அரசியல் திட்டத்தைக் கைவிட்டதன் மூலம் அப்படி பிளவுபடும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது திமுக-வுக்கே புதிய சவாலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சில திமுக ஆதரவாளர்களே இத்தகைய கருத்தை வெளியிட்டனர்.

இதற்கிடையே, ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் பாஜக இடம் பெறும் அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்; அது தங்களுக்கு பலம் சேர்க்கும் என்று சில பாஜக அணி ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி வேறொரு யதார்த்தம் களத்தில் நிலவி வந்தது.

அது, ரஜினி ஆதரவாளர்கள் என்போர், அடிப்படையில் அவரது ரசிகர்கள்தானே தவிர, அவர் கூறி வந்த ஆன்மிக அரசியலின் ஆதரவாளர்கள் அல்லர். அது தவிர, அவரது ஆதரவாளர்கள்/ரசிகர்கள் பட்டாளத்தில் பல கட்சி, கருத்தியல், ஆதரவு நிலைகள் உள்ளவர்கள், பல சாதிகள், மதங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ரஜினி ஒரு வேளை அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் காலப்போக்கில் இவர்கள் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அரசியலுக்கு வராத நிலையில் ரஜினியின் ஆன்மிக அரசியல் மீது அவர்களுக்குப் பற்று ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதற்கு அவர்கள் அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதுதான் அந்த யதார்த்தம்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்காத நிலையில், ஒருவேளை அவர் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அது பொதுமக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதனால் ஒரு கட்சி பெரிய அளவில் பலன் பெற முடியுமா என்பது ஒரு விவாதம். ஆனால், இதைத் தாண்டி, அப்படி அவர் குரல் கொடுத்தால் அது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்ற சந்தேகத்தை இந்த 4 மாவட்டச் செயலாளர்களின் அரசியல் முடிவு எழுப்பியுள்ளது.

ஒரே நேரத்தில் 4 மாவட்டச் செயலாளர்கள் ரஜினி கட்சிக்கு வந்தது மூலம் அது திமுக-வுக்கு பலம் சேர்க்குமா? இது என்ன விதமான விளைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனிடம் கேட்டோம்.

“இதெல்லாம் எதிர்பாராதது அல்ல. ரஜினி ஏற்கெனவே அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துவிட்டதால் அவருக்கு இது இழப்பு அல்ல. இது ஒரு பொருட்டே அல்ல. திமுக போன்ற ஒரு கட்சிக்கு இந்த வருகையால் மிகப் பெரிய பலம் சேர்ந்ததாகப் பொருள் கொள்ளவும் முடியாது. மொத்தத்தில் இது பெரிய அதிரடி மாற்றம் எதையும் தமிழக அரசியலில் ஏற்படுத்திவிடாது என்கிறார்” மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

அந்த ரசிகர்கள் நீண்டகாலம் காத்திருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை ரஜினி கெடுத்தார். மற்றபடி அவரது மன்றத்தினர் குறித்து ரஜினிக்கே பெரிய நம்பிக்கையெல்லாம் இருந்ததில்லை என்று குறிப்பிட்டார் இளங்கோவன்.

மேலும், ஆன்மிக அரசியல் என்பதெல்லாம் ஆய்வகத்தில் இருந்தது. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால்தான் அதன் விளைவை சொல்லியிருக்க முடியும். தவிர, அவரது மன்ற நிர்வாகிகள் பலர் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து நிறைய செலவு செய்திருந்தனர். அத்துடன், அவர்களில் பலர் ஏற்கெனவே திமுக, அதிமுக போன்ற கட்சி சார்புகள் உடையவர்கள்தான் என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

திமுகவில் இணைந்தது தொடர்பாக கே.செந்தில் செல்வானந்த் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் ரஜினி மக்கள் மன்ற ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தேன்.

ரஜினி மக்கள் மன்றத்தில் நான் இணைந்ததன் நோக்கம் ஒன்று தான் பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ஆனால் அதற்கு நிச்சயம் அதிகாரம் தேவை.

அந்த அதிகாரம் கிடைப்பது தலைவர் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்திருந்தால் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அறிவித்தார்.

அவரது முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன். அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் மீது நான் கொண்டுள்ள அன்பு மாறாது.

விருப்பம் உள்ளவர்கள் மாற்று இயக்கங்களில் இணைந்து மக்கள் சேவை செய்யலாம் என தலைமை விடுத்த அறிவிப்பை அடுத்து நான் ரஜினி மக்கள் மன்ற பொறுப்புகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தேன்.

திமுகவில் இணைவதின் முக்கிய நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே. எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு அல்ல. நல்ல தலைமையை கொண்டு இயங்கும் இயக்கம் திமுக என்பதாலும், ஸ்டாலின் ஆளுமை மிக்கவர் என்பதாலும் என்னை திமுகவில் இணைத்து கொண்டேன்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பிரதான பிரச்சினை குடி நீர் பிரச்சினை அதனை தீர்க்க திமுக ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களின் தாகம் தீர்த்து வைக்கபட்டது.

அது மட்டுமல்ல. திமுக ஆட்சியில் மினி பஸ், உழவர் சந்தை போன்ற பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எனவே, மக்களுக்கு சேவை செய்ய தமிழகத்தில் உள்ள வலுவான இயக்கம் திமுக மட்டுமே என்பதால் திமுகவில் இணைந்து கொண்டேன் என்று குறிப்பிட்டார்.

ரஜினி ஆன்மிக அரசியல் பற்றிப் பேசிவந்தார், அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் பாஜகவை தேர்வு செய்யவில்லை என்று கேட்டபோது

“பாஜக என்பது ஒரு பெரிய தேசிய கட்சி. அதில் இணையும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நான் மிகவும் எளியவன். கடந்த 12 ஆண்டுகளாக பொது சேவை செய்து வருகிறேன். திமுகவில் இணைந்தால் மட்டுமே எளிய மக்கள் சேவையை என்னால் தொடர்ந்து செய்ய முடியும்.

அதிமுக கட்சியில் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை, கட்சி உறுதி இல்லை. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய அதிமுக கட்சியில் ஆட்கள் இல்லை போன்ற பல்வேறு காரணங்களால் அதிமுகவில் இணையாமல் திமுகவில் இணைந்தேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

தன்னுடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர் என்றும் விரைவில் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் திமுக-வில் இணைய உள்ளனர் என்றும் கூறினார் செந்தில் செல்வானந்த்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி ஏ.ஜோசப் ஸ்டாலின்,

ரஜினிக்காக தனது பெயரில் தொடங்கப்பட்ட மக்கள் சேவை கட்சிக்கும் திமுகவில் தாம் இணைவதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதுடன், மக்கள் சேவை கட்சியை திமுகவில் இணைக்கவில்லை என்றும் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதைத் தவிர்த்ததற்கு தெரிவித்த காரணத்தை முழுமையாக ஏற்பதாகவும் கூறினார்.