முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!

14.01.2021 13:46:25

 

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சுருண்டது.

காலியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணி சார்பில், லஹிரு திரிமன்னே 4 ஓட்டங்களையும் குசல் பெரேரா 20 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அஞ்சலோ மத்தியூஸ் 27 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 12 ஓட்டங்களையும் தசுன் சானக 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களையும் தில்ருவான் பெரேரா, லசித் எம்புல் தெனிய ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். அசித்த பெனார்டோ ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டோமினிக் பெஸ் 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்றைய ஆட்டம் முடிவடைய இன்னமும் 46 ஓவர்கள் உள்ளநிலையில், தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.