மத்திய அரசிடம் யாழ். கலாசார மத்திய நிலையத்தை கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்

21.02.2021 09:59:20

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

நான் மாநகர முதல்வராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருகிறேன். எனினும், குறித்த கட்டடமானது யாழ்ப்பாண மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை, யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு, அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துள்ளேன்.

மேலும், அந்தக் கட்டிடத்தினை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் கட்டடத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுதுள்ளோம். வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு, இந்தியத் துணைத்தூதுவரிடம் இதுகுறித்து பல விடயங்களைத் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களும் இதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்.

இதேவேளை, முன்னைய மாநகர ஆட்சியாளர் குறித்த கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்திற்குக் கையளிப்பதற்கு இணங்கி இருந்ததன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், இந்த கலாசார மத்திய நிலையமானது யாழ். மாநகர சபையின் சொத்தாகும். அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநில சபைக்கு மீண்டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.