செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடுகிறது

02.05.2023 22:56:44

ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது.

செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.

இதன் தாக்கமாக, ‘தமிலெக்ஸ்’ எனும் முதல்வகை செவ்வியல் தமிழ் பேரகராதி ஜெர்மனியில் வெளியாக உள்ளது. இதற்காக அந்நாட்டின் ஜெர்மனிய அறிவியல் அறிஞர்கள் அகாடமி ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தமிலெக்ஸ் பேரகராதி 24 வருடங்களில் உருவாக்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொறுப்பு, ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் இந்தியா, திபெத் கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய ஓலைச்சுவடிப் பிரிவின் பேராசிரியர் ஈவா வில்டன் என்பவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

இவர், தமிலெக்ஸ் பேரகராதி உருவாக்கம் பற்றிய அதிகாரப்பூர்வமானத் தகவலை, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற தமிழ் வருடப் பிறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஈவா வில்டன் கூறும்போது, ‘‘இத்திட்டத்தில் சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான சொல் அகராதி அடங்கும் என்பது போற்றுதலுக்குரியது. இதனால் தற்கால தலைமுறையினர் சங்க இலக்கியங்களையும் எளிமையான முறையில் கற்கும் வாய்ப்பு ஏற்படுவது திண்ணம்’’ என்று தெரிவித்தார்.

சென்னை பல்கலை. அகராதி: இதுபோல், தமிழுக்கான அகராதிகள் பல உள்ளன. இதில் முக்கியமானதாக சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வெளியான 7 தொகுதிகள், பேரகராதியாகக் கருதப்படுகின்றன.

கடந்த 1930-ம் ஆண்டுகளிலேயே முடிக்கப்பட்ட இந்த பேரகராதியில், தமிழ் சொற்களுக்கான அர்த்தங்கள் உதாரணங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. முதல் 20 நூற்றாண்டுகளின் தமிழ் சொற்கள் இடம்பெற்ற இந்த பேரகராதி வெளியான பிறகும் பல சங்க இலக்கிய நூல்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால், 1930-ம் ஆண்டுகளுக்கு பின் பதிப்பானவற்றின் குறிப்புகள் இந்த பேரகராதியில் இல்லை. இந்த பேரகராதி சிகாகோ பல் கலைக்கழகம் சார்பில் டிஜிட்டல் பதிப்பாகவும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இதுவரை பதிப்பிக்கப்பட்டதில், முதல் பத்து நூற்றாண்டுகளின் செவ்வியல் தமிழ் இலக்கியங்களின் சொற்கள் அதற்கான அர்த்தங்களுடன் ஜெர்மனியின் பேரகராதியில் வெளியாக உள்ளன. இந்த சொற்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை எத்தனை வாக்கியங்களில் இடம்பெற்றுள்ளதோ, அத்தனைக் கானதை அதன் பொருளுடன் பேரகராதியில் பதிக்கப்பட உள்ளது. சுமார் 24 ஆண்டுகால திட்டமான இந்த தமிலெக்ஸ் பணியில் தமிழகத்திலும் சில பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த அகராதி அச்சு வடிவிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இணையத்தில் பயனாகும் வகையில், டிஜிட்டல் வடிவில் வெளியாக உள்ளது.

யார் இந்த ஈவா வில்டன்?

ஐரோப்பாவின் தற்போதைய ஒரே தமிழ்ப் பேராசிரியரான முனைவர் ஈவா வில்டன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2015-ம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருதான குறள் பீடம் விருதை பெற்றவர். புதுச்சேரியின் கீழைநாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவராகவும் இருந்த வர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூற்றின் 1-120 பாடல் களான கழிற்றியானை நிரை ஆகியவற்றின் செம்பதிப்புகளை தலா 3 தொகுதிகளாக ஈவா வில்டன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.