அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லைஎன கூறாதீர்கள் - சுமந்திரனுக்கு பதிலடி

04.04.2021 11:17:32

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என கூறாதீர்கள் என சுமந்திரனுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.

இனப்படுகொலை நடைபெற்றதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றையதினம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம்.

வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப்படுகொலை என்பது இன்று நேற்றல்ல 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா- பண்டா ஒப்பந்தத்தில் கூட எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1965ம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என கூறுவது ஐனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் அவருக்கு விளங்கவில்லையா? நான் அவருக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை 1983 ல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு இனத்தை அழிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனவே இனப்படுகொலை என்பது ஒருஇனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும் .உலகில் எத்தனை நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என மறைக்காதீர்கள். எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

உங்களால் முடியாவிட்டால் ஒரு பக்கம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் விசாரணை நடாத்தி இனப்படு கொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களை தகவல்களை திரட்டி எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்பில் தகவல்களை சேகரித்து நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்.என்றார்.