அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விமானமொன்றின் சேவை, 45 நிமிடங்கள் தாமதம்

08.03.2021 08:48:35

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விமானமொன்றின் சேவை, 45 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகளுக்கு, நீதிமன்றம் விதித்த பயண தடையை நீக்குவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் நாமல் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளை  சுமார் 45 நிமிடங்கள் தாமதப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு- கோட்டை நீதவான் நீதிமன்றம், நாமல் ராஜபக்ஷ மீது இரண்டு பயண தடைகளை பிறப்பித்திருந்தது. இவை இரண்டும் கடந்த 4 ஆம் திகதி நீக்கப்பட்டது.

இதனை நீதிமன்ற பதிவாளர் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறைக்கு தபால் மூலம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அமைச்சர் நமல் ராஜபக்ஷ, வெளிநாட்டுக்கு விஜயமொன்றினை மேற்கொள்வதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

குறித்த தருணத்தில், கட்டுநாயக்க விமான நிலையம், நீதிமன்றம் இரத்து செய்திருந்த  உத்தரவைப் பெறவில்லை. இதனால் அதிகாரிகள், நாமல் ராஜபக்ஷவை வெளிநாடு செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு துறை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு, நாமலுக்கு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவித்தார்.

அதன் பின்னர், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினருடன் எமிரேட்ஸ் விமானம் காலை 10.45 மணியளவில் டுபாய்க்கு காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.