போலிதகவல்கள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் – நீதி அமைச்சர்

19.04.2021 09:44:44

போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என கூறினார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதனை கையாள்வதற்குரிய சட்டம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அலி சப்ரி, மலேசியாவிலும் இந்தியாவிலும் கூட போலி செய்திகள் தொடர்பான கட்டுப்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

எனவே இலங்கையில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் சமூகங்களிடையே தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்யும் என்றும் பொது மக்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

இலங்கையில் உள்ள சமூக ஊடக சுயவிவரங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவை போலியானவை எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.