தமிழர் பூர்வீகத்தை அழிக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தால்...

04.04.2023 20:00:00

நாட்டு மக்கள் பசி பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு என பலகோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடுமையாக குற்றம்சாடியுள்ளார்.

மேலும் இனவாதத்தை தூண்டும் அரசாங்கம் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் திருகோணமலையில் தொல்பொருட்களை பாதுக்காப்பதாக கூறி அரசாங்கம் ஏற்படுத்தும் குழப்பங்களை உடன் நிறுத்த வேண்டும்.

அரச அபகரிப்பு

சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புக்களிடம் இருந்து எத்தகைய நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றாலும், தமிழர் பூர்வீகத்தை அழிக்கும் செய்றபாடுகளை சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் கைவிடப்போவதில்லை. 

அத்துடன், தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம்.

பௌத்த பிக்குகளின் பிரசன்னம் எதற்கு? 

தொல்பொருட்களை பாதுகாப்பது கடமை என்றாலும் தொல்பொருளை பாதுகாக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பௌத்த குருமார்களின் பிரசன்னம் ஏன் இருக்கின்றது” என்றும் கேள்வியெழுப்பினார்.