அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை

16.03.2021 08:59:41

 

பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்

2024/25 இல் எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு வேட்பாளர்களில் உங்கள் விருப்பு யாராக இருக்கும்?

தற்போது அதனைக் கூற இயலாது.

 நிகழ்கால நிலைமையின் அடிப்படையில் ?

 இந்தக் காலகட்டத்தில் எமது தெரிவு சஜித்தாகவே இருக்கும். இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் இரு தரப்பினரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.அதன்போது சஜித் அவர்களே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இணங்கியதோடு தேர்தல் பிரகடனத்திலும் இவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 சஜித் பிரேமதாசவுக்கு நிகராக பசிலும் முற்போக்கு சிந்தனை உடையவராக காணப்படுகின்றார். அவ்வாறான சூழ்நிலையில் உங்கள் நிலைப்பாடு?

எனக்கு அக்கருத்தோடு உடன்பாடில்லை, அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே “திவி நெகும” எனும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பிரதேச சபையின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார். எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவருக்கு சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் காணவில்லை.

 உங்களுக்கு சஜித் பிரேமதாச அவர்கள் அதிகாரங்களைப் பகிர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது?

அவர் அதிகார பகிர்விற்கு இணங்கியுள்ளார். இருப்பினும் இது நிகழ்கால சூழ்நிலையே, 2024/5 இன் போது பசில் அவர்களும் அதிகார பகிர்விற்கு இணங்குவாறானால், அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் இதனை பிரசாரப் படுத்தினால்….

 சஜித் அவர்கள் மூலமாக அல்லாது பசிலின் மூலமாக இதனை அடைவது இலகுவல்லவா?

அவர் இணங்குவாறாயின் அது இலகுவாக இருக்கும், இதனை நான் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமும் தெரிவித்திருந்தேன். “நீங்கள் தீர்விற்காக முயற்சி செய்தால் தீர்வினை அடைய முடியும் என்றும் உங்களை சிங்கள மக்களுக்கு எதிராக தொழிற்படுவதாக யாரும் குற்றப்படுத்த மாட்டார்கள் என்று…” அவரும் அதனை ஒத்துக்கொண்டார், ஆம் என்னால் முடியும் என்று ஏற்றுக்கொண்டாலும் அதனைச் செய்யவில்லை.

 ஏன் அவர் இதனைச் செய்யவில்லை?

 அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையில் அவர் இதனைச் செய்யவில்லை.