இன்று 2-வது ஒரு நாள் போட்டி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா ?

04.04.2021 11:02:00

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 274 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் சதத்தின் உதவியுடன் கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் தீவிரத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியுடன் குயின்டான் டி காக் உள்ளிட்ட சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.