உணவு இடைவேளையில் பாகிஸ்தான் 4 விக்கெட்டை இழந்து திணறல்

03.01.2021 11:02:31

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

 

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

 

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் களமிறங்கினர்.

 

மூன்றாவது ஓவரில் ஷான் மசூத் சவுத்தி பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய அசார் அலி நிதானமாக ஆடினார்.

 

இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், அபித் அலி 25 ரன்னில் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைலை 1 ரன்னிலும், ஃபவாத் ஆலமை 2 ரன்னிலும் ஜேமிசன் அவுட்டாக்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அசார் அலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

 

முதல் நாள் போட்டியின் உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 52 ரன்னும், கேப்டன் மொகமது ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

 

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டும், சவுத்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.