ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான பணிகள் தீவிரம்!

04.04.2023 21:10:58

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நியூயோர்க் நகரத்திற்கு வந்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வயது வந்த ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ட்ரம்ப், கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரை பெற்றுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைரேகை, புகைப்படம் மற்றும் முறைப்படி சமர்ப்பிக்கப்படும்.

நியூயோர்க் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்க்கும் நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்துறை மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் இரகசிய சேவை முகவர்கள் 76 வயதான ட்ரம்ப்பை நியூயோர்க் வழியாக லோயர் மன்ஹாட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி 14:15 மணிக்கு திட்டமிடப்பட்ட விசாரணையில் அவர் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் முழுமையாக வெளிப்படுத்தப்படும். அவர் குற்றமற்றவர் என அவரது வழக்கறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி முதலில் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக் அலுவலகத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வயது வந்த திரைப்பட நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் 130,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.