நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது

21.02.2021 10:16:14

பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

புதுச்சேரியில் தி.மு.க.ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இதற்கிடையே அடுத்தடுத்து காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர்.

இதனால் சட்டபேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி (சபாநாயகர் உள்பட) 14,  எதிர்க்கட்சிகள் 14 என சமநிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் இருந்து வருகிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன்பேரில் நாளை, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் நாராயணசாமிக்கு  அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை காலை 10 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கூட்டணியும் பெரும்பான்மையை இழக்கச் செய்ய எதிர்க்கட்சிகளும்  சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. இந்த போட்டியில் வெற்றியடைவது யார்? என்பது நாளை நடக்கும் வாக்கெடுப்பில் தெரிந்து விடும்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார். ஆளுநர் தமிழிசை உத்தரவின்பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது.

இதற்கிடையில், புதுச்சேரி காங்.கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.